பெங்களூரு மெட்ரோ கட்டணம் 30 சதவீதம் குறைப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853758.jpg?width=1000&height=625)
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோவில் உயர்த்தப்பட்ட கட்டணம், 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ கட்டணம் உயர்த்தியதால், பெங்களூருவாசிகளிடையே பரவலான எதிர்ப்பைத் தூண்டியது, அவர்களில் பலர் 'மெட்ரோவை புறக்கணிக்கவும்' என்ற ஹேஷ்டேக்கின் கீழ் சமூக ஊடகங்களில் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.
பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக, பெங்களூரு மெட்ரோவில் உயர்த்தப்பட்ட கட்டணம் 30 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் மகேஷ்வர் ராவ் கூறியதாவது:
பெங்களூரு மெட்ரோ கட்டண உயர்த்தப்பட்டது குறித்து வாரியம் பொதுமக்களிடமிருந்து சில அடிப்படை கருத்துக்கள் வந்துள்ளன. அது தொடர்பாக, நேற்றும் இன்று காலையும் ஒரு கூட்டத்தை நடத்தினோம். அதில் கட்டண நிர்ணயக் குழுவின் ஒட்டு மொத்த பரிந்துரைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தினோம். அதன் அடிப்படையில், திருத்தங்கள் செய்ய முடியும் என்று முடிவு செய்தோம்.
அதன்படி, 30 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளோம்.அது இன்று முதல் அமலுக்கு வரும்.பயணிகளின் நலனுக்காக நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்.
இவ்வாறு மகேஷ்வர் ராவ் கூறினார்.