காதலிக்காக சரபோஜி மன்னர் கட்டிய சத்திரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கிறது தொல்லியல் துறை

சென்னை:தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில், மராட்டிய மன்னர் சரபோஜி கட்டிய முத்தம்மாள் சத்திரத்தை, தமிழக தொல்லியல் துறை புதுப்பிக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரத்தின் மீது, மரங்கள் முளைத்து, பழுதடைந்த நிலையில் இருந்தது.

இதுகுறித்த செய்தி, இரண்டாண்டுகளுக்கு முன், நம் நாளிதழில் வெளியானது. இதையடுத்து, அங்கு ஆய்வு செய்த தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள், அதை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்தனர். தற்போது அது, தமிழக தொல்லியல் துறையால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

சரஸ்வதி மஹால்



தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களில் மக்கள் செல்வாக்கை பெற்றவர் இரண்டாம் சரபோஜி. அவர், சோழ மண்டலத்தில் வீடுகள், மடங்களில் இருந்த தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளின் ஓலைச்சுவடிகளை சேகரித்து, சரஸ்வதி மஹால் நுாலகம் அமைத்தார்; சில சுவடிகளை பதிப்பித்தார்.

தஞ்சையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மிக பயணம் செல்வோர், தங்கி, உண்டு செல்ல வசதியாக தனுஷ்கோடி வரை பல சத்திரங்களை கட்டினார்.

அவற்றில், தஞ்சாவூர் காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டையில் சைதாம்பாள்புரம் சத்திரம், துறையூரில் அன்னசத்திரம், ராசகுமரபாயி சத்திரம், ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம், பட்டுக்கோட்டை காசங்குளச் சத்திரம், மணமேல்குடி திரவுதாம்பாள்புரம் சத்திரம், மீமிசலில் ராஜகுமாரம்பாள் சத்திரம், ராமேஸ்வரத்தில் ராமேசுவரம் சத்திரம், தனுஷ்கோடியில் சேதுக்கரை சத்திரம் உள்ளிட்டவை தற்போதும் உள்ளன.

இந்நிலையில், சரபோஜி அரண்மனையில் அதிகாரியாக இருந்தவரின் தங்கையும், சரபோஜியின் காதலியுமான முத்தம்மாள், பிரசவத்தின் போது இறந்தார்.

அதற்கு முன், சரபோஜி மன்னரிடம், தன் நினைவாக அங்கு, கர்ப்பிணியருக்கு மருத்துவம், கல்வி, உணவு வழங்க வேண்டும் என்று வேண்டினார்.

ஆய்வு



அதன்படியே, அப்பகுதியை முத்தம்மாள்புரம் என மாற்றி, 1800ல், அங்கு அழகிய சத்திரம் கட்டி, மருத்துவம், கல்வி, அன்னதானங்களை செய்தார்.

இந்த சத்திரம், 'ப' வடிவில், அழகிய தோரண அமைப்புடன் யானை, குதிரை பூட்டிய தேர் சக்கர வாயிற் பகுதி, துாண்கள் தாங்கி நிற்கும் பெரிய முற்றங்கள், சிவலிங்கங்கள், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாடுடைய மரத்துாண்கள், நீர் நிறைந்த கிணறு என, அழகாக வடிவமைக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, இங்கு பள்ளிக்கூடம், மாணவர் விடுதிகள் செயல்பட்டன. பின், அது பழுதடைந்ததால் மூடப்பட்டன. இங்கு தமிழக தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

முத்தம்மாள் சத்திரம் குறித்த ஆவணங்களை, வருவாய்த் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றிடம் பெற்று, பழமை மாறாமல், பொதுப்பணித்துறையுடன் இணைந்து புதுப்பிக்கும் பணியில் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. பணி முடிந்ததும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக மாற்றப்படும்.

Advertisement