சத்தி - ஈரோடு - கோபி ரயில் வழித்தடம்; ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., முறையீடு

5

திருப்பூர்; மேற்கு மண்டல ரயில் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரயில் திட்டங்களில் ஒன்றான, சத்தியமங்கலம் - ஈரோடு - கோபி ரயில்வழித்தட பணிகளை வேகப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, திருப்பூர் எம்.பி., சுப்பராயன், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து மனு அளித்தார்.

மனு விவரம்:

திருப்பூர் பார்லிமென்ட் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அந்தியூர், கோபி, பவானி ஆகிய சட்டசபை தொகுதிகள் பின்தங்கிய விவசாய பகுதியாக உள்ளது. திருப்பூர், பெருந்துறை தவிர பிற பகுதியில் ரயில் சேவை முழுமை பெறவில்லை; மோசமான நிலையில் உள்ளது. பல பகுதிகளுக்கு ரயில்வே இணைப்பு இல்லை.

சத்தியமங்கலம் - ஈரோடு ரயில் வழித்திட்டம், 69.3 கி.மீ., துாரத்தில் அமைக்க, 2008 ஜன., 24 ல் ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. எட்டு ரயில்வே ஸ்டேஷன்கள் வருமென அறிக்கை தயாரிக்கப்பட்டது. சத்தியமங்கலம் - -அந்தியூர் - -மேட்டூர் ரயில் திட்டப்பாதை 90 கி.மீ., கொண்டது. இப்பாதைக்கான முதல்கட்ட ஆய்வு, 2006 செப்., 26 ல் முடிக்கப்பட்டு, ரயில்வேக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இப்பாதையில் ஒன்பது ஸ்டேஷன்கள் வருமென விபரங்களில் தெரிவிக்கப்பட்டது. நிலமதிப்பீடு மற்றும் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் பணிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இவ்விரு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், மூன்று மாவட்ட வர்த்தகம், போக்குவரத்து மேம்படும். பள்ளி, கல்லுாரிக்கு செல்பவர்கள், பணியாளர் உட்பட அனைத்து தரப்பினரும் பயன்பெறுவர்.

விளை பொருட்களான மஞ்சள், பருத்தி, வாழைப்பழம் மற்றும் பூக்கள் போன்ற பண்ணை விளைபொருட்களை ஈரோடு, மைசூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்வது எளிதாகும். மக்களின் பொருளாதாரம் மேம்படும். எனவே இந்த இரண்டு திட்டங்களையும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தகம் பாதிக்கிறது...

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நாடு முழுதும் உள்ள பெரும்பாலான ரயில்வே லைனுடன் இணைந்துள்ளது. சத்தியமங்கலம் - ஈரோடு ரயில் வழித்தடம் உருவாகி, இணைப்பு கிடைத்தால், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் விரிவான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். ஒப்புதல் வழங்கி, கருத்துரு சென்ற பின்னரும், அடுத்த கட்ட பணி, நிதி ஒதுக்கீடு முடிவு செய்யவில்லை. ரயில் இணைப்பு இல்லாததால், விவசாய வளர்ச்சியுள்ள பகுதிகளில் வர்த்தகம் மற்றும் வணிகம் பாதிக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு, ரயில்வே அமைச்சர் உடனடியாக பரிசீலிக்க வலியுறுத்தி, மனு வழங்கியுள்ளேன்.- திருப்பூர் எம்.பி., சுப்பராயன்

Advertisement