சில வரி செய்திகள்...

பூச்சாட்டு விழா கோலாகலம்
அவிநாசி, ராயம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், தன்னாசியப்ப சுவாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் பூச்சாட்டு விழாவில் கடந்த மாதம் 29ம் தேதி கொடிவேரியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் நடைபெற்றது. நேற்று அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்டவைகளுடன் அபிஷேக பூஜை மற்றும் கிடாய் வெட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது.
இயற்கை குறித்த விழிப்புணர்வு
ஈரநிலம் அமைப்பு சார்பில்,' இயற்கையை காக்கும் பல்லுயிர்கள்' எனும் தலைப்பில் கருத்தரங்கம், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் வளாகத்தில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., (அலகு - 2) ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். ஈரநிலம் அமைப்பு நிறுவனர் தமிழரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேசினார். 'இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பது' எனும் தலைப்பில் ஓவியங்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பொருளியல் துறை தலைவர் விநாயகமுர்த்தி, தமிழ்த்துறை தலைவர் பாலசுப்ரமணியன் பேசினர். நுண்கலை மன்ற துணை தலைவர் விஜயகீதா நன்றி கூறினார்.
ரோட்டில் தேங்கும் கழிவுநீர்
திருப்பூர் மங்கலம் ரோட்டில், உரிய கால்வாய் கட்டமைப்பு இல்லாததால், கழிவுநீர், ரோட்டில் தேங்குகிறது. மங்கலம் ரோட்டில் புக்குளிபாளையம் பகுதியை ஒட்டிய சாலையில் மழைநீர், கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு இல்லை. இதனால், ரோட்டில் வழிந்தோடி வரும் கழிவுநீர், பள்ளியை ஒட்டிய சாலையில் குளமாக தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி, சுகாதார கேடு அதிகரிக்கிறது. பள்ளிக்குழந்தைகள் மற்றும் பாதசாரிகளுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மின்கம்பம் அமைக்க இன்று பேச்சு
தாராபுரம், காங்கயம் வட்டாரங்களில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனங்கள், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, தங்களின் துணை மின் நிலையத்துக்கு எடுத்து செல்ல, 33 கே.வி., திறனுள்ள மின் பாதையை, பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை வழியாக அமைத்து வருவதாகவும், இதற்காக, ஊராட்சியில் எவ்வித தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் மின் பாதை, கிராம சாலைகளின் வழியாக அமைக்கப்பட்டு வருகிறது; இதனால், எதிர்காலத்தில் கிராம சாலைகளை விரிவுபடுத்தும் வாய்ப்பு இல்லாமல் போகும்' என்பது உட்பட பல்வேறு ஆட்சேபனைகளை சுட்டிக்காட்டி, கலெக்டருக்கு மனு அளித்திருந்தனர். இதனால், இன்று, (14ம் தேதி) காலை, 11:00 மணிக்கு காங்கயம் தாலுகா அலுவலகத்தில், முத்தரப்பு பேச்சு நடக்கிறது.
தபால் ஆயுள் காப்பீடு முகாம்
திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கையில், 'திருப்பூர் தலைமை தபால் நிலையம், துணை தபால் நிலையங்கள் மற்றும் கிளை தபால் நிலையங்களில் வரும், 19 ம் தேதி தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம் நடக்கிறது. தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணைய, 19 முதல், 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான்கார்டு நகல், பாஸ்போர்ட் போட்டோ இரண்டு, பட்டப்படிப்பு முடித்திருந்தால் அதற்கான சான்றிதழ் கொண்டு வரலாம்,' என தெரிவித்துள்ளார்.
மேலும்
-
திருப்பதி சுவாமி தரிசனம்: முன்பதிவு தேதி அறிவிப்பு
-
தொடர்கிறது 'இன்ப்ளுயன்ஸா' தொற்று: குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியம்
-
இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பம்; 3 டிகிரி அதிகரிக்கும்
-
கால்நடை தடுப்பூசி முகாம் நாளை முதல் துவக்கம்
-
ரூ.15.60 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை
-
வாரசந்தை வளாகத்தில் அடிப்படை வசதி; தியாகதுருகம் மக்கள், வியாபாரிகள் கோரிக்கை