817 இடங்களில் அனுமதியற்ற விளம்பர பலகைகள்; கணக்கெடுத்தது மாநில நெடுஞ்சாலைத்துறை

கோவை; கோவை மாவட்டம் முழுவதும், 817 இடங்களில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக, மாநில நெடுஞ்சாலைத்துறை கணக்கெடுத்துள்ளது. இவற்றை, 'ஹோர்டிங்ஸ் ரிமூவல் வீக்' என திட்டமிட்டு, ஒரு வாரத்தில் அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் கோர்ட் உத்தரவுகளை மீறி, கோவை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளிலும் விளம்பர பலகைகள் வைக்க, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகைகளை, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றாலும், அவற்றை அகற்றாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, மாநில நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ்க்கு, 'கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்' செயலர் கதிர்மதியோன் நோட்டீஸ் அனுப்பினார். இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவு மற்றும் கோர்ட் அறிவுறுத்தல்களை பின்பற்றி, நெடுஞ்சாலைத்துறை எல்லைக்குள் அமைத்துள்ள விளம்பர பலகைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் எத்தனை விளம்பரங்கள் இருக்கின்றன என கணக்கெடுக்கப்பட்டன. அதில், இதுவரை, 817 விளம்பர பலகைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இவற்றை ஒரே வாரத்தில் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையின் ஐந்து டிவிசன்களில், 817 இடங்களில் அனுமதியற்ற விளம்பர பலகைகள் உள்ளன. 'ஹோர்டிங்ஸ் ரிமூவல் வீக்' என்ற பெயரில் ஒரே வாரத்தில் அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற இருக்கிறோம்,'' என்றார்.

Advertisement