மோசடி விளம்பரங்களால் பெற்ற ரூ.170 கோடி டிபாசிட் முடக்கம்

புதுடில்லி :கவர்ச்சி விளம்பரங்கள் வாயிலாக பொதுமக்களிடம் முதலீடு பெற்ற மோசடி நிறுவனத்தின், 170 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத் துறை, கணக்கில் காட்டப்படாத 90 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் நொய்டா, ஷாம்லி, ஹரியானா மாநிலத்தின் ரோடக் மற்றும் டில்லி உட்பட பல பகுதிகளில், அமலாக்கத் துறையினர் கடந்த 11ம் தேதி சோதனை நடத்தினர். அந்த இடங்களில் செயல்பட்ட, க்யூ.எப்.எக்ஸ்., டிரேட் லிமிடெட் என்ற பெயரிலான, அன்னியச் செலாவணி வர்த்தகம் மற்றும் முதலீடு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.

அந்த நிறுவனத்தின் இயக்குநர்களான ராஜேந்திர சூட், வினீத்குமார், சந்தோஷ் குமார் மற்றும் மூளையாக செயல்பட்ட நவாப் அலி என்ற லாவிஷ் சவுத்ரி ஆகியோர் மீது ஹிமாச்சல பிரதேசத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளின்படி, அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தியது.

அதையடுத்து, தற்போது ஒய்.எப்.எக்ஸ்., என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் பல வங்கிகளின் டிபாசிட்டுகள், 170 கோடி ரூபாயை முடக்கியுள்ளதாக, அமலாக்க இயக்குநரகம் அறிக்கை வாயிலாக நேற்று தெரிவித்துள்ளது.

அதில், துபாய் மற்றும் இந்திய நகரங்களில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் வாயிலாக, பொய்யான, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, முதலீட்டாளர்களை ஏமாற்றி பெற்ற முதலீடுகள் தொடர்பாக பல வங்கிக் கணக்குகளை துவக்கி முதலீடு செய்த, 170 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி டிபாசிட்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும், கணக்கில் காட்டப்படாத 90 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்துள்ள, அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் அந்த மோசடி கும்பல் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement