வர்ராரு வர்ராரு அழகரு வர்ராரு... வைகையில் இடையூறின்றி பாலப்பணி முடியுமா சித்திரைக்குள் முத்திரை பதிக்குமா நெடுஞ்சாலைத்துறை

மதுரை: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு மேம்பால பணிகள் தீவிரமாக நடக்கின்றன. வைகையில் இப்பாலத்திற்கான துாண்கள் அமைக்கும் பணி நடப்பதால் சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நேரத்தில் இடையூறு ஏற்படாத வண்ணம் பணிகளை முடிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.



தமுக்கம் முதல் கோரிப்பாளையம் வழியாக நெல்பேட்டை வரை ரூ.190 கோடியில் 3 கி.மீ., நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. இதில் செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடுக்கு ஒரு பிரிவு செல்கிறது. தேவர் சிலையின் இடதுபுறத்தில் இருந்து ஏ.வி. பாலத்தின் மீது 6 துாண்களுடன் படர்ந்து மீனாட்சி கல்லுாரி முன்பாக சென்று வைகை ஆற்றை கடக்கிறது. இப்பணியில் ஆற்றுக்குள் 19 துாண்கள் அமைகின்றன.


துாண்கள் அமைக்க ஆற்றுக்குள் பெரிய குழி தோண்டியதால் கிடைத்த மண் ஆற்றுக்குள்ளேயே பரவிக் கிடக்கிறது. இதனால் ஆறு முழுவதும் அடைபட்டது போல பணி நடக்கிறது. திருவிழா காலத்தில் இதில் தண்ணீர் செல்வது தடைபட வாய்ப்புள்ளது.



மே மாதம் நடக்கும் மதுரை சித்திரை விழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முக்கியத்துவம் பெற்றவை. ஆற்றில் இறங்கும் கள்ளழகரைக் காண ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் குவிந்துவிடுவர். இவ்விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.


இந்நிலையில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு பாலப் பணிகள் இடையூறாக இருக்குமோ என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சுகுமாரன் கூறியதாவது: பாலப் பணிகள் இந்தாண்டு டிசம்பரில் முடிவடையும். அதற்காக சித்திரைத் திருவிழாவிற்கு எந்த இடையூறும் வராது. ஏனெனில் விழாவுக்கு முன்பாகவே கலெக்டர் தலைமையில் மாநகராட்சி, போலீஸ், நெடுஞ்சாலை, பொதுப்பணி, நீர்வளம் என பல்துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி தேவையான முன்னேற்பாடுகளை செய்து விடுவர்.


நெடுஞ்சாலைத் துறையும் வைகை தண்ணீர் வரத்துக்கேற்ப பணிகளை நிறுத்தி வைத்தோ, சீரமைத்தோ ஏற்பாடுகளை செய்து விடும் என்றார்.

Advertisement