சவுதியில் இறந்த தொழிலாளி உடல் காரைக்கால் கொண்டு வரப்பட்டது

காரைக்கால்: சவுதியில் இறந்த தொழிலாளியின் உடல், ஒரு மாதத்திற்கு பிறகு, சொந்த ஊரான காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காரைக்கால் தோமாஸ்அருள் திடல் வீதியை சேர்ந்தவர் லுாயில்கிஸ்வர், 36. இவரது மனைவி முத்துலட்சுமி,30.

இவர், கடந்த 2023ம் ஆண்டு, சவுதி அரேபியா நாட்டில் ஜித்தா பகுதிக்கு சென்று, தங்கி வீட்டு வேலை மற்றும் டிரைவர் வேலை செய்துவந்தார்.இவர், அடிக்கடி மனைவி மற்றும் உறவினர்களிடம் மொபைல் போன் மூலம் பேசி வந்தார். கடந்த ஜன., 13ம் தேதி, முத்துலட்சுமியிடம், லுாயில்கிஸ்வர் கடைசியாக பேசியுள்ளார்.

மறுநாள், முத்துலட்சுமி தனது மொபைல் போனில் தொடர்புகொண்டபோது, கணவர் போனை எடுக்காததால், சவுதியில் லுாயில்கிஸ்வர் தங்கியுள்ள வீட்டின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அப்போது, மாரடைப்பால் லுாயில்கிஸ்வர் இறந்து விட்டதாக, தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து முத்துலட்சுமி மற்றும் குடும்பத்தினர், காரைக்கால் துணை ஆட்சியர் அர்ஜூன் ராமகிருஷ்ணனை சந்தித்து, லுாயிஸ்கிஸ்வர் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தனர்.

இதே போல், த.மு.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜாமுஹம்மதுவிடமும் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் த.மு.மு.க., சார்பில், சவுதியில் உள்ள ஜித்தா அமைப்பின் மண்டல தலைவர் அப்துல்மஜித், ஜமீல்தீன் உள்ளிட்டோரின் உதவியுடன், உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி, 28 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம், சென்னை விமான நிலையத்திற்கு லுாயில்கிஸ்வர் உடல் கொண்டுவரப்பட்டது. பின், அங்கிருந்து, ஆம்புலன்ஸ் மூலம் நேற்று காரைக்காலுக்கு கொண்டு வரப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement