புத்தக திருவிழா இன்று துவங்குகிறது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லை புத்தக திருவிழாவை அமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்.
கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலை வி.எம். திடலில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நுாலகத் துறை சார்பில் 3வது கல்லை புத்தகத் திருவிழா இன்று 14ம் தேதி துவங்கி வரும் 23ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
புத்தக அரங்கை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்த பின், கூறியதாவது:
புத்தகத் திருவிழாவை அமைச்சர் வேலு இன்று காலை 10:00 மணிக்கு துவக்கி வைக்கிறார். எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு 66 அரங்கு, அரசுத் துறைக்கு 18 அரங்கு, என மொத்தம் 84 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
47 முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் காலை 10:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை புத்தக திருவிழா நடக்கிறது.
காலை 10:00 முதல் மாலை 4:00 வரை பள்ளி, கல்லுாரி மாணவர்களின் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், 4:00 முதல் 5:00 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மாலை 5:00 முதல் 6:00 வரை உள்ளூர் பேச்சாளர்களின் சிறப்புரை, 6:00 முதல் 7:00 மணி வரை கலை மற்றும் பண்பாட்டுத் துறை கலை நிகழ்ச்சிகள், 7:00 முதல் 9:00 மணி வரை சிறப்பு விருந்தினர்களின் கருத்துரை, பட்டிமன்றம் நடக்கிறது.
அனுமதி இலவசம். பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள், உணவு விற்பனையகம், இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர், வாகனம் நிறுத்துமிடம், போக்குவரத்து, கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.