கள்ளக்குறிச்சியில் விலங்குகள் சரணாலயம்... அமைக்கப்படுமா; விபத்தில் சிக்குவதை தடுக்க நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சி மாவட்டம் மிகப்பெரிய வனப்பகுதியை உள்ளடக்கியது. வனப்பகுதியில் வசிக்கும் மான், மயில், குரங்கு, கீரி, பாம்பு, உடும்பு, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பழ மரங்கள் வளர்க்கப்பட்டு, தண்ணீருக்காக குட்டைகள் வெட்டப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த காப்புக்காடு முழுதும் வனத்தோட்ட கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, வனத்தோட்டக் கழகத்தினர் வனப்பகுதியில் இருந்த பழ மரங்கள் மற்றும் குட்டைகளை அழித்து, யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கின்றனர்.
மரங்கள் நன்கு வளர்ந்ததும் அறுவடை செய்து பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்புகின்றனர். இதன் மூலம் அரசுக்கு கனிசமான வருவாய் கிடைக்கிறது. பழ மரங்கள் வெட்டப்பட்டதால் வனவிலங்குகளின் உணவுத் தேவை கேள்விக்குறியாக உள்ளது.
உணவுக்காக சாலையோரம் வரும் குரங்குகளுக்கு வாகன ஓட்டுனர்கள் பழம், உணவுகளை வழங்குகின்றனர்.
காட்டுப்பன்றி, மான், மயில் உள்ளிட்ட விலங்குகள் இரைதேடி அருகில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
வன விலங்குகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற மின் வேலி அமைத்தல், பயிரில் குருணை வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் மின் வேலியில் சிக்குவது. கிணற்றில் விழுவது. நாய் கடித்தும், வாகனங்களில் மோதியும் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது.
கடந்த 13ம் தேதி கூவனுார் அருகே இரங்காடு என்ற பகுதியில் 6 மயில்கள் இறந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. சமூக விரோத கும்பல் மான், மயில், காட்டுபன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்கின்றனர்.
இதனால், வன விலங்குகள் அழியும் நிலை ஏற்படுகிறது.
எனவே, வேட்டையாடுதல் மற்றும் விபத்துகளில் இருந்து விலங்குகளை காப்பாற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சரணாலயம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.