போலீஸ் செய்திகள்...

கஞ்சா பதுக்கியவர் கைது

தேனி: கண்டமனுார் எஸ்.ஐ., பாண்டியம்மாள் தலைமையிலான போலீசார் கண்டமனுார் விலக்கு வருஷநாடு ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது கண்டமனுார் வடக்குத்தெரு ராதாகிருஷ்ணன் 23, பாலிதீன் பையை வைத்திருந்தார். போலீசார் சோதனையிட்டனர். அதில் ரூ.1800 மதிப்புள்ள 40 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

சமையல் ஒப்பந்ததாரர் உயிரிழப்பு

தேனி: கடமலைக்குண்டு அம்பேத்கர் தெரு முனியாண்டி 50. சமையல் ஒப்பந்ததாரர். இவரது மனைவி மகேஸ்வரி 40. திருமணம் முடிந்து 22 ஆண்டுகள் முடிகிறது. குழந்தை இல்லாததால் மகேஸ்வரியின்உடன் பிறந்த தங்கை பிரேமாவை திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சமையல் பணிக்கு செல்லும் முனியாண்டிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி நெஞ்சுவழி ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிப். 16ல் வருஷநாட்டிற்கு வேலைக்கு சென்று வீடு திரும்பியவர், மறுநாள் காலையில்வெளியே சென்றவர் கடமலைக்குண்டு பஜார் அருகே இறந்து கிடந்துள்ளார். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

18 வெள்ளாடுகள் திருட்டு

தேனி: ஆண்டிபட்டி தாலுகா மூனாண்டிபட்டி தெற்குத்தெரு பாண்டி 67. இவர் 29 வெள்ளாடுகள், மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார். பகலில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் பாண்டி, இரவில் வெள்ளாடுகளையும், மாடுகளையும் தனது தோட்டத்தில் உள்ள ஆட்டுக் கொட்டத்தில் அடைப்பது வழக்கம். பிப். 17 ல் வெள்ளாடுகளை கொட்டத்தில் அடைத்து விட்டு வீட்டிற்கு துாங்கச் சென்றார். நேற்று காலை உறவினர்சின்னச்சாமி, பாண்டியின் மகன் தங்கபாண்டியின் அலைபேசியில், கொட்டத்தில் ஆடுகள் இறந்து கிடப்பதாக தெரிவித்தார். தோட்டத்திற்கு சென்ற போது வயல்வெளிகளில் 3 ஆடுகள் இறந்து கிடந்ததாகவும், கொட்டத்தில் இருந்த 18 வெள்ளாடுகள் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.75 லட்சம் ஆகும். பாண்டி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement