பாலியல் புகாரில் ஒரே ஆசிரியர் இரு முறை சஸ்பெண்ட் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை

1

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் பள்ளியில் பாலியல் புகாரின் பேரில் ஒரே ஆசிரியர் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணையை துவங்கினர்.

மார்த்தாண்டம் அருகே மருதம்கோட்டில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணிபுரியும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக மாணவிகளின் புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அந்த ஆசிரியர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததின் பேரில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னரும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் தொடர்ந்துள்ளது.

இது பற்றி மாணவிகள் புகார் அளித்ததன் பேரில் மீண்டும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பின் பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது. அத்துறை அதிகாரிகள் பள்ளியில் மாணவிகளிடம் விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு போதைப் பழக்கம் உள்ளதாகவும், போதையில் இருக்கும் போது மாணவிகளிடம் சீண்டலில் ஈடுபடுவதாகவும் பெற்றோர் புகார் கூறினர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement