கறவை மாடு கடன் பரிந்துரைக்கு கட்டாய வசூல்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கறவை மாடு கடனுக்கு பரிந்துரை செய்ய கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் ஆவின் நிர்வாகத்தின் கீழ் 395 பால் கொள்முதல் நிலையம் மற்றும் சங்கம் செயல்படுகிறது. இதன் கீழ் 9 ஆயிரத்து 56 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் தினமும் 57 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 7 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் நிலையம், சங்கம் மூலம் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 50 ஆயிரம் லிட்டர் பால் காரைக்குடி ஆவின் பாலகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

கறவை மாடுகள் மூலம் பால் தடையின்றி கிடைக்க செய்யும் நோக்கில், பசுக்களை வளர்ப்பவர்களுக்கு ஆண்டுதோறும் கடன் வழங்கப்படுகிறது. அந்தந்த தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரு கறவை பசுவிற்கு ரூ.18,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு அந்தந்த கொள்முதல் நிலையம், சங்கங்களில் இருந்து கறவை பசு வளர்ப்போரின் ஆதார் எண், பால் கணக்கு அட்டை உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, கறவை மாட்டு கடன் வழங்கலாம் என தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பரிந்துரை செய்வார்கள்.

தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் 2025- 2026 ம் ஆண்டிற்கான கறவை மாடு வளர்ப்பு கடன் வழங்க, தற்போது பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடிதம் வழங்க ஒரு பசுவிற்கு ரூ.500 வரை கட்டாய வசூல் செய்வதாக மாடு வளர்ப்போர் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த பரிந்துரை கடிதம் மூலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் 2025 ஏப்ரல் முதல் கறவை மாடுகளுக்கு தலா ரூ.18,000 வீதம் கடன் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கடனை ஒரு ஆண்டிற்குள் திருப்பி செலுத்தினால், வட்டி தள்ளுபடி உண்டு. அதிக பட்சம் ஒரு உறுப்பினர் நிபந்தனையின்றி ரூ.1.50 லட்சம் வரை கறவை மாடு வளர்ப்பு கடன் பெறலாம். அதற்கு மேல் நிபந்தனையுடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

மானாமதுரை துணை பதிவாளர் (பால்வளம்) ஜெரினாபானு கூறியதாவது: பால் கொள்முதல் நிலையம், சங்கம் மூலம் கறவை மாடு வளர்ப்போருக்கு பரிந்துரை கடிதம் மட்டுமே வழங்குவோம். அதற்கு பின் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் தான் உரிய விதிப்படி அவர்களுக்கு கடன் வழங்குவர். இதற்காக மாடு வளர்ப்போரிடமும் எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement