விவசாயிகள் அடையாள அட்டை திட்டம்: வேளாண் அலுவலர்களுக்கு பணிச்சுமை

5

திருப்பூர்: தனித்துவ அடையாள அட்டை திட்டத்திற்காக, விவசாயிகளின் நில விவரங்களை சேகரிக்கும் பணியில் வேளாண், தோட்டக்கலை களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 'பணிச்சுமையால் துறை சார்ந்த பிற பணிகள் பாதிக்கின்றன' என, அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

துறை சார்ந்த திட்டங்களின் பயன் தடையின்றி சென்று சேர்வதற்காக ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள எண் வழங்க, மத்திய அரசு முடிவெடுத்தது. அந்தந்த மாநில அரசுகளின் வாயிலாக, விவசாயிகளின் விவரங்களை பிரத்யேக செயலி வாயிலாக சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.தமிழகத்தில், விவசாயிகளின் விவரங்களை மொபைல் செயலி வாயிலாக பதிவேற்றம் செய்யும் பணியை வேளாண் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு அலுவலரும், 4 அல்லது, 5 ஊராட்சிகளில் இப்பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அலுவலர்கள் கூறுகையில், ''நாள் முழுக்க இப்பணி காரணமாக, துறையின் பிற பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. விவசாயிகளை நேரில் சந்தித்து, தொழில்நுட்பம் கற்றுத்தருதல், பயிர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை வழங்குதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த முடிவதில்லை. வேளாண் மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களை கொண்டு இப்பணிகளை முடிக்க வேண்டும் என, உயரதிகாரிகள் வழிகாட்டுதல் வழங்குகின்றனர்; ஆனால், இது சாத்தியப்படவில்லை'' என்றனர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''விவசாயிகளின் நில அடங்கள் விவரம் அனைத்தும் வருவாய்த்துறையினர் வசமே உள்ளன. இப்பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டால் தான், விவசாயி மற்றும் விவசாய நிலம் தொடர்பான முழுமையான தகவல்களை பெற முடியும்; இத்திட்டத்தின் நோக்கமும் முழு பலன் தரும்'' என்றார்.

Advertisement