'ட்ரோன்' மூலம் மறு நில அளவீடு பணி... துவக்கம்; முதற்கட்டமாக முருங்கப்பாக்கம் தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி முழுதும் 'ட்ரோன்' மூலம் மறு நில அளவை செய்யும் திட்டத்தில், முதற்கட்டமாக முருங்கப்பாக்கம் வருவாய் கிராம நில அளவீடும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி முழு நிலப் பகுதியும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன சர்வே செய்யப்பட்டது. அதனை மறு நில அளவீடு செய்வதற்கான அரசாணை கடந்தாண்டு அக்., மாதம் வெளியிடப்பட்டது.
மத்திய அரசின் நிலம், வளங்கள் இயக்குநரகத்தின், நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டமான 'நக்சா' மூலம் புதுச்சேரி முழுதும் மறு நில அளவீடு செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 'ட்ரோன்' பயன்படுத்தி நில அளவை, புவி அமைவிட புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களை உருவாக்கி, உள்ளாட்சி அமைப்புகளால் கவனிக்கப்படும் சொத்து வரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
முதற்கட்டமாக புதுச்சேரி தாலுகா, முருங்கப்பாக்கம் வருவாய் கிராமம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில், ட்ரோன் மூலம் நில அளவை மேற்கொண்டு, ஒளிப்படம் (ஆர்த்தோ ரெக்டிபைட் இமெஜ்) ஒ.ஆர்.ஐ., உருவாக்கப்படும். அந்த படத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்தில் வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாக துறைகளின் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் நில அளவை மேற்கொள்ளப்படும்.
அதன்பிறகு நவீன நில அளவை கருவிகளை கொண்டு (டி.ஜி.பி.எஸ்., மற்றும் இ.டி.எஸ்.) நில அளவை செய்து புல வரைபடம் தயார் செய்யப்படும். நில அளவை செய்து தயார் செய்யப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
அவை விதிகளின்படி பரிசீலித்து தீர்வு காணப்படும். இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நிலை ஆவணங்கள் வெளியிடப்படும்.
இந்த நடைமுறைகள் முடிந்தவுடன், புவி அமைவிட புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களும், சொத்துவரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில ஆவணங்கள், நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் அனைத்து தனியார் நிலங்களுக்கும் தற்போது உள்ள தகுதியான நில உரிமையாளரின் பெயரில் பட்டா மாற்றப்படும்.
இத்திட்டத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் குலோத்துங்கன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, நில அளவை பதிவேடு துறை இயக்குநர் செந்தில்குமார், தாசில்தார்கள் பிரத்திவி, குப்பன், சந்தோஷ்குமார், விமலன் மற்றும் பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
பாலியல் புகாரில் ஒரே ஆசிரியர் இரு முறை சஸ்பெண்ட் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை
-
உட்கார ரூ.10 கட்டணம் சேர்களை பறித்த அதிகாரிகள்
-
மாநகராட்சி டெண்டரில் குளறுபடி 4 நாளாக அதிகாரிகள் திணறல்
-
மீஞ்சூரில் ரயில்வே சுரங்கபாதை அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
-
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த பண்ருட்டியில் போராட்ட ஆயத்த மாநாடு அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு
-
கும்மிடி கலைமகள் பள்ளி கலை பண்பாட்டு விழா