உணவுப்பொருள் கலப்படம், போலிகள்: பெண்களுக்கு விழிப்புணர்வு திட்டம்
திருப்பூர்; உணவுப் பொருள் வழங்கல் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இயக்குனரின் வழிகாட்டுதல் படி, மாநிலத்தில் உள்ள கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பதிவு பெற்ற, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறியதாவது: உணவுப் பொருட்களில் கலப்படம், போலி விளம்பரங்கள் வாயிலாக ஏமாற்றப்படுவது, மொபைல் போன்களுக்கு ஓ.டி.பி., அனுப்பி அதன் வாயிலாக சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்கள் நடக்கின்றன; இத்தகைய மோசடிகளில் பெண்களே அதிகளவில் ஏமாற்றப்படுகின்றனர்.
குறிப்பாக, கல்வியறிவு குறைந்த கிராமப்புற பெண்கள் அதிகளவில் ஏமாறுகின்றனர். இதுகுறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சமையல் காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது, வங்கி மற்றும் அரசின் மகளிர் திட்டங்கள் வாயிலாக வழங்கப்படும் நலத்திட்டங்கள், தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மட்டும், மாவட்ட அளவில் ஒரு இடத்தில் இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்படும். ஆனால், கிராம மக்கள் அனைவருக்கும் விழப்புணர்வு சென்று சேர வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவு பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களில், 100 பேருக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் வாயிலாக, கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினர் மட்டுமின்றி, காவல் துறை, மகளிர் திட்டம், முன்னோடி வங்கி, தீயணைப்புத்துறை, ஆயில் நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி
-
கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு
-
தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்
-
மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு
-
விவசாயி தெரிவித்த குறையை உடனடியாக தீர்த்த கலெக்டர்