கோவையில் ரூ.7.80 கோடியில் டி.என்.ஏ., ஆய்வகம் அமைகிறது

கோவை; கோவை மாவட்ட சுகாதாரத்துறை பணிகள் அலுவலக வளாகத்தில், 7.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரத்யேக தடயவியல் டி.என்.ஏ., ஆய்வகம் அமைப்பதற்கான, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
சிக்கலான பிரேத பரிசோதனை, போக்சோ வழக்குகளில் டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொள்ள மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால், குற்றச்சம்பவங்களில் தீர்வு காண்பதில் போலீசாருக்கு சிக்கல், தாமதம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, கோவையில் தடய அறிவியல் துறையின் கீழ் டி.என்.ஏ., ஆய்வகம் அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், 2022 -23 காவல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாத முடிவில், கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில், 7.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடயவியல் டி.என்.ஏ., ஆய்வுப்பிரிவு அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆய்வக கட்டுமான பணி நடந்து வருகிறது.
கோவை தடய அறிவியல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ' டி.என்.ஏ., பரிசோதனைக்கு பிரத்யேகமாக ஆய்வகம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடக்கின்றன. இந்த ஆய்வகத்திற்காக, உதவி இயக்குனர் தலைமையில், 8 புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டடம், உபகரணங்கள், கெமிக்கல், புதிய பணியிடங்களுக்கான ஊதியம் என பல பிரிவுகளுக்கும் சேர்த்து, 7.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.