அதானிக்கு எதிரான புகார்: இந்திய அரசின் உதவியை நாடிய அமெரிக்கா

வாஷிங்டன்: தொழிலதிபர் அதானிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உதவும்படி இந்திய சட்டம் மற்றும் நீதித்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாக, அமெரிக்கா பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த போது, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை பெற அதானி, பல்வேறு இந்திய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ரூ.2000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாகவும், அந்த தகவலை மறைத்து, அமெரிக்கர்களிடம் கணிசமான முதலீடுகளை திரட்டி உள்ளதாகவும், இது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அமெரிக்க அரசு வழக்குப்பதிவு செய்தது. இது இந்திய அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.
இந்நிலையில் நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் அமெரிக்கா பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: அதானி மீதான புகாரை விசாரித்து தாக்கல் செய்வதாகவும், இதற்காக இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறையின் உதவியை நாடி உள்ளதாகவும் கூறியுள்ளது.