மாமியாரை கொல்ல மருந்து கேட்ட மருமகள் வழக்கில் திருப்பம்

பெங்களூரு, மாமியாரை கொல்ல மருந்து கேட்ட பெண், தான் தற்கொலை செய்து கொள்ள கேட்டது தெரியவந்துள்ளது.

பெங்களூரு, சஞ்சய் நகரில் வசிப்பவர் டாக்டர் சுனில் குமார். இரண்டு நாட்களுக்கு முன் இவரது, 'வாட்ஸாப்' எண்ணுக்கு, ஒரு பெண் குறுந்தகவல் அனுப்பினார்.

அதில், 'என் மாமியாருக்கு 70 வயதாகிறது; கொடுமைப்படுத்துகிறார். அவரை கொல்ல எத்தகைய மருந்து கொடுக்கலாம் என்று யோசனை தாருங்கள்' என கேட்டிருந்தார்.

அதிர்ச்சி அடைந்த சுனில் குமார், சஞ்சய் நகர் போலீசில் புகார் அளித்தார். நேற்று ஊடகங்களில் இச்செய்தி வெளியானதும், ஒரு தம்பதி சஞ்சய் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

அப்போது கணவர், 'என் தாய்க்கும், மனைவிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். என் தாயை கொல்வதற்காக மருந்துகளை கேட்கவில்லை; அவர் தற்கொலை செய்து கொள்ளவே கேட்டுள்ளார்' என, போலீசாரிடம் தெரிவித்தார்.

தகவலறிந்து அங்கு வந்த டாக்டர் சுனில் குமார் கூறுகையில், “விசாரணையில் அப்பெண் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

''அவரை குடும்பத்தினர் நன்கு கவனித்து வருகின்றனர். இப்பெண், 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக என் மொபைல் போன் எண்ணை தெரிந்து, எனக்கு வாட்ஸாப்பில் தகவல் அளித்து உள்ளார்.

“இதற்கு முன்பு கூட, ஒருவர் எனக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்தார். என்னை சிக்க வைக்க போனில் தகவல் அனுப்பினரோ என்ற அச்சத்தில், போலீசில் புகார் அளித்தேன்,” என்றார்.

Advertisement