ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர பணியில் டாக்டர்கள் மனித உரிமை ஆணையம் உத்தரவு
சென்னை:'கர்ப்பிணியருக்கு, 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பயிற்சி பெற்ற டாக்டர்களை பணியமர்த்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆகஸ்ட் 7ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவிழிவேந்தன், தன் மனைவி ஜமுனாவை பிரசவத்துக்காக, மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார்.
மகப்பேறு டாக்டர் இல்லாததால், செவிலியரும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் பிரசவம் பார்த்துள்ளனர்; ஆண் குழந்தை பிறந்தது.
ஜமுனாவுக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதையடுத்து, ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜமுனாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான செய்தி அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக விசாரித்தது. ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மகப்பேறு டாக்டர் பணியில் இல்லாததால் தான், செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரசவம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தாய் உயிரிழந்து உள்ளார்.
எனவே, தமிழகம் முழுதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 24 மணி நேரமும் கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அனுபவம் வாய்ந்த மூத்த டாக்டர்களை பணியமர்த்த வேண்டும்.
இது தொடர்பான வழிகாட்டுதலை, பொதுசுகாதாரத்துறை இயக்குநருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.
தமிழகம் முழுதும் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இடையே, 24 மணி நேரமும் '108' ஆம்புலன்ஸை பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைக்க, சுகாதாரத் துறை துணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பிரசவத்தின் போது உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு, தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'