'ரீல்ஸ்' எடுக்க ஆற்றில் குதித்த பெண் டாக்டர் சடலமாக மீட்பு

20

கொப்பால் : 'ரீல்ஸ்' எடுப்பதற்காக துங்கபத்ரா ஆற்றில் குதித்த ஹைதராபாத் பெண் டாக்டர், சடலமாக மீட்கப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த பெண் டாக்டர் அனன்யா மோகன் ராவ், 26. இவர், தோழியர் அஷிதா, சாத்விக் ஆகியோருடன், நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டம், கங்காவதியில் உள்ள சானாபூருக்கு சுற்றுலா வந்தார். சானாபூர் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கினர்.

அன்று மாலை, துங்கபத்ரா ஆற்றில் மூவரும் குளிக்கச் சென்றனர். ரீல்ஸ் எடுக்க விரும்பிய அனன்யா, அங்குள்ள பாறையின் மீது இருந்து ஆற்றில் குதித்தார். அப்போது, ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்தது.

குதித்த வேகத்தில் மேலே வரமுடியாமல் தவித்தார். இதை பார்த்த தோழியர், உதவிக்கு கூச்சலிட்டனர். அதற்குள் அனன்யா நீரில் மூழ்கினார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று உள்ளூர் நீச்சல் வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், சிறிது தொலைவில் பாறைகளுக்கு இடையே அனன்யா உடல் சிக்கியிருந்தது தெரிந்தது. பல மணி நேர முயற்சிக்குப் பின், அவரது உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்குப் பின், குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement