தேசிய திறனாய்வுத்தேர்வு; மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் தேசிய திறானய்வுத்தேர்வை, 1,901 மாணவர்கள் எழுதினர்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசியத்திறனாய்வுத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வகுப்பு முடியும் வரை, மாதம் தோறும், ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நேற்றுமுன்தினம் நடந்தது.

அதில், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு அரசுப்பள்ளி, ஆனைமலை, மதுக்கரை அரசுப்பள்ளி என மொத்தம், ஏழு மையங்களில் இத்தேர்வு நடந்தது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தேர்வை கண்காணித்தனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'கல்வி மாவட்டத்தில், தேசிய திறனாய்வுத்தேர்வு எழுத மாணவர்கள் - 850, மாணவியர் - 1,113 என மொத்தம், 1963 பேர் விண்ணப்பித்தனர். அதில், மாணவர்கள் - 814, மாணவியர் - 1,087 பேர் தேர்வெழுதினர்; மாணவர்கள் - 36, மாணவியர் - 26, என, மொத்தம், 62பேர் தேர்வு எழுதவில்லை,' என்றனர்.

வால்பாறை



வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடப்பு ஆண்டிற்கான தேசிய திறனாய்வுத்தேர்வு நடந்தது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் மொத்தம்,168 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆறு மாணவர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 162 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

உடுமலை



அரசுப்பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு, உடுமலை கோட்டத்தில் நான்கு மையங்களில் நடந்தது.

உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடந்தது.

காலை, 9:30 மணி முதல் 11:00 மணி வரை, 11:30 மணி முதல் 1:00 மணி வரை நடந்தது. மொத்தமாக, 980 மாணவர்கள் இத்தேர்வு எழுதினர்.

Advertisement