புதிய காவல் நிலையம் அமைக்க படப்பையில் இடம் தேர்வு

படப்பை:தாம்பரம் மாநகர காவல் ஆணையரக கட்டுப்பாட்டில், மணிமங்கலம் காவல் நிலையம் உள்ளது. இதன் எல்லைப் பரப்பு அதிகமாக உள்ளதால், குற்றங்கள் நடந்தால், சம்பவ இடத்திற்கு போலீசார் செல்ல தாமதமாகிறது.
இதனால், மணிமங்கலம் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, படப்பையில் புதிய காவல் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
படப்பை, ஒரத்துார், நாட்டசரன்பட்டு, செரப்பணஞ்சேரி, சாலமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை, படப்பை காவல் நிலையத்துடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, படப்பை, பெரியார் நகரில் உள்ள பழைய ஆரம்ப சுகாதாரம் நிலையத்தை சீரமைத்து காவல் நிலையமாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் அசோகன், மாவட்ட குழு தலைவர் மனோகரன் ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
இதே இடத்தில் உள்ள படப்பை மன்றத்தின் புதிய கட்டடம் தீயணைப்பு நிலையமாக மாற்றும் பணிகளையும் பார்வையிட்டனர். படப்பையில் புதிய காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைய உள்ளதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.