குரோம்பேட்டை சிக்னலில் 'யு - டர்ன்' தடை விதித்து தடுப்பு அமைப்பு

குரோம்பேட்டை:குரோம்பேட்டையில், மண்டல அலுவலகத்திற்கு செல்லும் இடத்தில், ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கில் மண்டல அலுவலக சாலை வழியாக வரும் வாகனங்கள் வலதுபுறம் 'யு - டர்ன்' எடுத்து, தாம்பரம் நோக்கி செல்கின்றன.

சாலையின் கிழக்கில் குரோம்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி, மண்டல அலுவலக சாலைக்கும் செல்கின்றன.

ஒரே நேரத்தில், ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு - கிழக்கு பகுதியாக வரும் வாகனங்கள் 'யு - டர்ன்' எடுப்பதால், எப்படி செல்வது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பமடைகின்றனர்.

சில நேரங்களில், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதும், தடுமாறி கீழே விழுவதும் நடக்கிறது.

அந்நேரங்களில், ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல் ஏற்படுகிறது.

தொடர்ந்து இப்பிரச்னை நிலவுதால், அந்த இடத்தில், குரோம்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் 'யு - டர்ன்' எடுத்து, மண்டல அலுவலக சாலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மண்டல அலுவலக சாலை வழியாக வரும் வாகனங்கள், வழக்கம் போல் 'யு - டர்ன்' எடுத்து, தாம்பரம் நோக்கி செல்லும்.

குரோம்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் சிக்னலை கடந்து, நேராக எம்.ஐ.டி., மேம்பாலத்தில் ஏறி, 'யு - டர்ன்' எடுத்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால், அந்த சிக்னலில் நெரிசலும், விபத்தும் குறையும் என, போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement