ரயில்வே சுரங்கபாதை பணிகளை முடிக்காவிட்டால் போராட்டம் * போஸ்டர் ஒட்டிய சமூக நல அமைப்புகள்

திருவொற்றியூர்:'விம்கோ நகர் மற்றும் அண்ணாமலை ரயில்வே சுரங்கபாதை பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்' என, சமூக நல அமைப்புகள், போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளன.

திருவொற்றியூர் மேற்கு பகுதியில், அண்ணாமலை நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், சார்லஸ் நகர் உட்பட, 30 க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இந்த பகுதிகளைச் சேர்ந்த, 50,000 க்கும் மேலான மக்கள், அண்ணாமலை நகர் ரயில்வே கேட்டை கடந்தே, திருவொற்றியூர் கிழக்கு மற்றும் நெடுஞ்சாலை பகுதிக்கு வர வேண்டியுள்ளது.

இதனால், பாதசாரிகள் ரயிலில் அடிப்பட்டு, உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு தீர்வாக, 2022ல், 30 கோடி ரூபாய் செலவில், இரு பேருந்து வழிபாதைகளுடன் கூடிய, பிரமாண்ட சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கியது. இரண்டு ஆண்டுகள் கடந்தும், 10 சதவீத பணிகள்கூட முடியவில்லை.

அதேபோல், விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே இருந்த ரயில்வே கேட்டிற்கு மாற்றாக, 25.09 கோடி ரூபாய் செலவில், சுரங்கபாதை அமைக்கும் பணி, கடந்தாண்டு மார்ச்சில் துவங்கியது.

அதன்படி, ரயில்வே தண்டவாள பகுதியில், 155 அடி துாரத்திற்கான பணிகள் முடிந்தன. திருவொற்றியூர் நெடுஞ்சாலை பக்கம், 475 அடி துாரமும், ஜோதி நகர் பக்கம், 495 அடி துார பணிகளும் பாக்கியுள்ளன. இதிலும், பாதி பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.

இவ்விரு ரயில்வே சுரங்கபாதை பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், பள்ளி, கல்லுாரி செல்வோர், வேலைக்கு செல்வோர் கடும் சிரமம் மேற்கொள்கின்றனர். இறந்தவரின் உடலை ஊர்வலமாக கொண்டு செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. மேலும், பழையபடி ரயில்வே தண்டவாளங்களை கடக்க முற்படும் பாதசாரிகள், ரயிலில் அடிப்பட்டு இறக்கும் சம்பவம் தொடர்கிறது.

மூன்று ஆண்டுகளாக ரயில்வே சுரங்கபாதை பணிகள் ஜவ்வாக இழுத்து வருவதால், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இல்லாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என, திருவொற்றியூர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், திருவொற்றியூர் நலசங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவொற்றியூர் கிளை உள்ளிட்ட சமூக நல அமைப்பினர், போஸ்டர் அடித்து, திருவொற்றியூர் முழுதும் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement