ஊத்துக்கோட்டை பஜார் சாலையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

ஊத்துக்கோட்டை:தமிழக - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இங்கு, 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, தாலுகா அலுவலகம், டி.எஸ்.பி., வேளாண்மை, போலீஸ் நிலையம், மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளிகள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.

சென்னையில் இருந்து, திருப்பதி செல்லும் வாகனங்கள், ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன. தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

இதேபோல, திருவள்ளூரில் இருந்து, ஆந்திர மாநிலம், சத்தியவேடு, தடா, வரதயபாளையம், சூளூர்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றன.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஊத்துக்கோட்டை பஜார் பகுதி, பூ, பழம், காய்கறி, மளிகை, ஹோட்டல்கள், குளிர்பானக் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொருட்கள் வாங்க செல்பவர்கள், தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர்.

இதனால் பாதசாரிகள் நடக்க முடியாமலும், வாகனங்கள் செல்ல முடியாமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் மணிக்கணக்கில் நெரிசல் ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மாணவர்கள், வயதானவர்கள் நிலை பரிதாபம். இதே நிலை திருவள்ளூர் சாலையிலும் நிகழ்கிறது.

அரசு மருத்துவமனைக்கு செல்லும், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனம் பலமுறை நெரிசலில் சிக்கி குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள திருவள்ளூர் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ரவுண்டானா கட்டாயம்

ஊத்துக்கோட்டையில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை, உயர்கோபுர மின்விளக்கு உள்ளது.

மேலும், இந்த இடத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகனங்கள் திரும்ப முடியாத நிலை உள்ளது.

எனவே, இப்பகுதியில் சிலை, விளக்கு, ஆக்கிரமிப்பு அகற்றி, ரவுண்டானா அமைத்தால் நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.

Advertisement