லட்சுமிபுரத்தில் பாதாள சாக்கடை அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி நீதிமன்றத்தை நாட பாதிக்கப்பட்டோர் முடிவு

வேளச்சேரி:அடையாறு மண்டலம், வேளச்சேரி, லட்சுமிபுரத்தில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அங்கு, முதல் குறுக்கு தெரு வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் நிறைந்தது.
ஜகன்நாதபுரம் பகுதியில் வசிப்போர், வேளச்சேரி, மாநகராட்சி வார்டு அலுவலகம், தண்டீஸ்வரர் கோவிலுக்கு செல்வோர், இந்த தெருவையே பிரதான வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக, இந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் பல முறை புகார் அளித்தும், இதுவரை அடைப்பு சரி செய்யப்படவில்லை. இதனால், தொடர்ந்து சாலையில் கழிவுநீர் வழிந்தோடி, வேளச்சேரி ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாய் கலக்கிறது.
தினமும் காலை, மாலை நேரங்களில், பாதாள சாக்கடை மேன்-ஹோலில் இருந்து மலத்துடன் கூடிய கழிவுநீர் வெளியேறி வருவதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
அத்தெருவாசிகள், தினமும் கழிவுநீரிலேயே நடந்து செல்வதால், பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
பாதாள சாக்கடை அடைப்பால், பல மாதங்களாக இப்பிரச்னையை சந்தித்து வருகிறோம். சென்னை மாநகராட்சி, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திடம் பல முறை புகார் அளித்தால், ஒரு முறை லாரியில் கழிவுகளை அகற்றுகின்றனர்.
ஒரு நாள் மட்டுமே கழிவுநீர் இல்லாத சாலையை காண முடிகிறது. அடுத்த நாள், மீண்டும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காண முடியவில்லை.
தொடர்ந்து, இத்தெருவில் வழிந்தோடும் கவுநீர் குறித்த வீடியோ, தேதி வாரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதபோல, கொடுத்த புகார்களுக்கும் ஆதாரம் உள்ளது.
இனி, அதிகாரிகளை நம்பி பலன் இல்லை. எனவே, இருக்கும் ஆதாரங்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காண முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.