சிலம்ப மாஸ்டருக்கு மாணவர்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி: வீடியோ இணையத்தில் வைரல்

4

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், உயிரிழந்த சிலம்ப மாஸ்டருக்கு, அவரது மாணவர்கள் கதறி அழுதபடி சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்திய காட்சி, காண்பவர் கண்களை குளமாக்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமண சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகணேசன். இவர் திருமயம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்தார்.

கபடி வீரரான இவர், கபடி போட்டியில் விளையாடிய போது கையில் அடிபட்டது. உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு மீண்டும் கபடி போட்டியில் விளையாட சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இன்று ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் திருமயம் தாலுகா அலுவலகம் எதிரே அவர் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது அவரிடம் சிலம்பம் கற்றுக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கதறி அழுதனர்.
அழுது கொண்டே சிலம்பம் சுற்றி குருவுக்கு அஞ்சலி செலுத்தினர். காண்பவர் கண்களை குளமாக்கிய இந்த காட்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Advertisement