ஆவடிக்கு 3 மருந்தகம் தான் பொதுமக்கள் அதிருப்தி

ஆவடி, தமிழகம் முழுதும் 1,000 முதல்வர் மருந்தகத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக, நேற்று திறந்து வைத்தார்.

அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 34 மருந்தகங்கள் நேற்று திறக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை, ஆவடி மட்டும் தான் மாநகராட்சியாக உள்ளது. மற்றவை நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து.

இந்த நிலையில், 5.50 லட்சம் மக்கள் தொகை உள்ள ஆவடி மாநகராட்சியில், மூன்று இடங்களில் மட்டுமே முதல்வர் மருந்தகம் நேற்று திறக்கப்பட்டன.

ஆனால், நகராட்சியாக உள்ள திருவள்ளூரில், 12 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் ஜெயக்குமார், 61, கூறியதாவது:

ஏற்கனவே 'அம்மா' மருந்தகம் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு முழுமையாக பயனளிக்கவில்லை. இந்நிலையில், முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டு உள்ளது.

இதில், பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், அரசு முத்திரையுடன் மருந்துகள் வழங்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப அவற்றை அதிகரிக்க வேண்டும்.

அதேபோல், முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டால் தான், திட்டத்தின் பலன் மக்களை சென்றடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement