நாளை திட்டமிட்டபடி போராட்டம்; ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

சென்னை; திட்டமிட்டபடி நாளை(பிப்.25) போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் சங்கத்தினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தல் சமயத்தில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தி.மு.க., உறுதி அளித்தது. ஆனால் 4 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்தும், மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், நாளை (பிப்.25) ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
போராட்ட அறிவிப்பை அடுத்து, அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினருடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்குமாறு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது,
இந் நிலையில், நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது; 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினோம். அரசு எங்களின் கோரிக்கைகளை நிராகரிக்கவில்லை. 4 வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.
முதல்வர் எங்களது கோரிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுத்து இருப்பதாக அமைச்சர்கள் குழுவினர் எங்களிடம் தெரிவித்தனர். எங்கள் கோரிக்கை குறித்து தீர்வு கிடைக்காத பட்சத்தில் வேறு வழியின்றி இந்த போராட்டக்களத்துக்கு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.
போராட்டத்தின் மூலம் எங்கள் ஊழியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறோம். நாளை(பிப்.25) தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடைபெறும். மறியல் போராட்டமாக இல்லாமல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக நடக்க முடிவு எடுத்துள்ளோம்.
நாளை மாலை ஒருங்கிணைப்பாளர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
