விஜயேந்திரா திவாலானார் அமைச்சர் கார்கே 'நக்கல்'

கலபுரகி: ''கர்நாடக மாநில அரசு திவாலாகவில்லை. கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தான் திவாலாகி உள்ளார்,'' என அமைச்சர் பிரியங்க் கார்கே 'நக்கல்' அடித்து உள்ளார்.

கலபுரகியில் நேற்று கிராமிய வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:

மைசூரில் உதயகிரி கலவரம் தொடர்பாக பா.ஜ.,வை சேர்ந்த எந்த பிரிவினர் போராட்டம் நடத்த போகின்றனர் என்பதை முதலில் அக்கட்சியினர் சொல்ல வேண்டும். இந்த போராட்டம் அதிகாரப்பூர்வ பா.ஜ.,வினரால் நடத்தப்படுகிறதா அல்லது அதிகாரமற்ற பா.ஜ.,வினரால் நடத்தப்படுகிறதா என்பது தெரியவில்லை.

இது போன்று, வக்பு பிரச்னையின் போது பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதி வரை யாரும் நடத்தவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவதாக மற்றொரு பிரிவினர் கூறினர். அவர்களும் போராட்டம் நடத்தவில்லை.

பா.ஜ.,வில் உள்ள அணிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை சொல்ல வேண்டும். உதயகிரியில் பிரச்னை முடிந்த பின்பு போராட்டம் நடத்த காரணம் என்ன. சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கவே நடத்துகின்றனர்.

காங்கிரஸ் அரசை பற்றி பேசுவதற்கு பிடிக்கவில்லை என மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். பிடிக்கவில்லை என்றால், அவர் ஏன் பேச வேண்டும். முதலில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை ஒழுங்காக வளருங்கள்.

மாநில அரசு திவாலாகவில்லை. பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தான் திவாலாகி விட்டார். விஜயேந்திரா புள்ளி விபரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும். கல்யாண கர்நாடகாவின் மாவட்ட பகுதிகளில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளை, வரும் சனிக்கிழமை துவக்கி வைக்க உள்ளோம்.

பெலகாவியில் நடக்கிற குற்ற சம்பவங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். மாநிலத்தின் எல்லைகளை பாதுகாப்பதும், கன்னடர்களின் மேம்பாட்டுக்குமே முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement