எலான் மஸ்க் துறையில் 20 தொழில்நுட்ப ஊழியர்கள் கூட்டாக ராஜினாமா

வாஷிங்டன்: எலான் மஸ்க் தலைவராக இருக்கும் திறன் மேம்பாட்டுத் துறையில், 20க்கும் மேலான தொழில்நுட்ப ஊழியர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர்.
அமெரிக்க அதிபராக 2வது முறை பொறுப்பேற்றுள்ள டிரம்ப், அரசாங்கத் திறன் மேம்பாட்டு துறையை ஏற்படுத்தியுள்ளார்.
இதற்கு தலைவராக உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் செயல்படுகிறார்.
இந்தத் துறை, அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறது. முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்களை கண்டுபிடிக்கிறது. தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு ஊழியர்கள் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்கவும் செய்கிறது.
இந்தத் துறையின் செயல்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சி தரப்பிலும், தொழிற்சங்கத்தினர் தரப்பிலும், பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், அரசாங்க செயல்திறன் துறையில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இன்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.
பொது சேவைக்கான கடமை உணர்வின் காரணமாக அரசாங்கத்தில் சேர்ந்தோம். தற்போது பொது சேவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ராஜினாமா செய்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜினாமா செய்த ஊழியர்கள் ஒரு காலத்தில் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் போது நிறுவப்பட்ட யுனைடெட் ஸ்டேட்ஸ் டிஜிட்டல் சர்வீஸ் என்று அழைக்கப்பட்ட அலுவலகத்தில் பணிபுரிந்தனர். அனைவரும் முன்பு கூகிள் மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் மூத்த பதவிகளை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.