கேரளாவில் அதிகரிக்கும் முதியோர் இல்லங்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அங்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.


உலகின் பல வளர்ந்த நாடுகளில் முதியவர்கள் அதிகமாக உள்ளது பிரச்னையாக உள்ளது. ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இளம் வயதினர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. இதனால், அங்கு முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து, அங்கு குழந்தைப் பிறப்பை அதிகரிக்க அந்நாட்டு அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவிலும் அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் என பெயர் எடுத்துள்ள கேரளாவிலும் இதேபோன்று மற்றொரு பிரச்னை உருவாகி உள்ளது. அங்கு ஆண்டுதோறும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 67.27 சதவீதம் அதிகரித்து உள்ளது அம்மாநில சமூக நீதி இயக்குநரகத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2016 - 17 ம் ஆண்டில், 19,149 ஆக இருந்த முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை 2023- 2024 ல் 32,032 ஆக அதிகரித்து உள்ளது அம்மாநிலத்தின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதற்கு பலவேறு காரணங்களை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். போதிய வருமானம் இல்லாதது அல்லது பராமரிக்க முடியாமல் போவது உள்ளிட்ட காரணத்தினால், பல முதியவர்கள் அவர்களின் குழந்தைகளினாலேயே முதியோர் இல்லத்தில் சேர்த்து விடப்படுகின்றனர்.

திருமணம் செய்யாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள் ஆகியோர் வயதான காலத்தில் உதவிக்கு இல்லாமல் முதியோர் இல்லங்களை நாடுகின்றனர். போதிய வருமானம் இல்லாதவர்கள், அரசு நடத்தும் முதியோர் இல்லங்களில் சேர்கின்றனர்.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரும்பாலும், முதியவர்களை இந்த இல்லங்களில் சேர்த்து விட்டாலும், சில பணக்காரர்களும் தங்களின் கடமையை தட்டிக்கழிப்பதற்காக பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் என அதிகாரி ஒருவர் கவலையுடன் தெரிவித்தார். சிலர், குழந்தை பருவத்தில் புறக்கணித்த பெற்றோரை புறக்கணித்ததால், அவர்களை வயதான உடன் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் என தெரிவித்தார்.

Advertisement