இ.சி.ஆர்., பூஞ்சேரியில் த.வெ.க., பேனர் கிழிப்பு

திருப்போரூர், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, மாமல்லபுரம் பேரூராட்சியில் அடங்கிய பூஞ்சேரியில், இன்று கொண்டாடப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உட்பட 2,000 பேருக்கு மட்டுமே, அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆண்டு விழாவை ஒருங்கிணைக்க, 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

விழாவை ஒட்டி இ.சி.ஆர்., சாலையோரத்தில் கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை, 100க்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில், மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீரா, தன் மனைவியுடன் உள்ளது போல் வைக்கப்பட்ட பேனர்களில், மனைவி புகைப்படத்தை விட்டு, வீராவின் புகைப்படம் மட்டும் கிழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, 20க்கும் மேற்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டு உள்ளன.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணி வரை சரியாக இருந்த நிலையில், அதன் பிறகு கிழிக்கப்பட்டதாக தெரிகிறது. கிழிந்த பேனரை உடனடியாக மாற்றும் முயற்சியில், கட்சியினர் இறங்கினர். பேனர் கிழிப்பிற்கு காரணம் உட்கட்சி பூசலா அல்லது வேறு காரணமாக என, சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், விழா நடைபெறும் இடத்தில் அணுகு சாலையில் இடையூறாக வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளை, போலீசார் அப்புறப்படுத்தினர்.

Advertisement