அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில்8 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்
அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில்8 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், போராடும் ஜாக்டோ - ஜியோ சங்க தலைவர்களை, முதல்வர் ஸ்டாலின் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட தொகுப்பூதிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காமல் உள்ள ஆசிரியர்களுக்கு, உடனே அதை வழங்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத கால ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஜாக்டோ - ஜியோவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கண்டன கோஷங்களை எழுப்பினர்.
துணைத்தலைவர் சரவணபவன், செயலாளர் முருகன், மண்டல தலைவர் ஸ்ரீனிவாசலு, நகராட்சி ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பாளர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.