நடிகர் வடிவேலு காமெடி பாணியில் பலசரக்கு 'சாம்பிள்' வாங்கி மோசடி நெல்லையில் தம்பி கைது; அண்ணனுக்கு வலை

திருநெல்வேலி,:திருநெல்வேலியில், அரிசி, எண்ணெய் என, பலசரக்கு மொத்த கடைகளில் சரக்குகளை வாங்கி, லட்சக்கணக்கில் பணம் தராமல் ஏமாற்றியவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் பொன்ராஜ், 53; அரிசி மொத்த வியாபாரி. இம்மாத துவக்கத்தில், அவரிடம் மொபைல் போனில் பேசி, 30,000 ரூபாய்க்கு அரிசி மூட்டைகள் வாங்கிய நபர், அதற்கான தொகையை மற்றொரு நபர் வாயிலாக கொடுத்தார். பின், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 மூட்டை அரிசி வாங்கி, பணம் தராமல் ஏமாற்றினார்.

அரிசி மூட்டைகளை, துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் ஒரு பலசரக்கு கடையில் கொடுத்து அவர் பணம் பெற்றுச் சென்றதும் தெரிய வந்தது. பொன்ராஜ் புகாரில், திருநெல்வேலி டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜுடி விசாரித்தார்.

ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், அவரது அண்ணன் தங்கராஜ் ஆகியோர் டிப்டாப் ஆக உடை அணிந்து, பெரிய தொழிலதிபர் போல காட்டிக்கொள்வர்.

ஏராளமான சிம் கார்டுகளை பயன்படுத்தி, மொபைல் போனில் பேசி, முதலில், 10,000 ரூபாய்க்கு சரக்கு வாங்கி பணம் கொடுத்து விட்டு, பின், லட்சக்கணக்கில் பொருட்களை வாங்கி ஏமாற்றுவதை, இவர்கள் வாடிக்கையாக கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

ஆலங்குளத்தில், அரிசி கடை அதிபரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். யாராவது மோசடி புகார் கொடுத்தால், அவர்கள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி போலீசில் சிக்க வைப்பதும் இவர்களது ஸ்டைல்.

இதனால், பல்வேறு புகார் இருந்தும், இவர்கள் போலீசிடம் சிக்காமல் தப்பி வந்தனர். திண்டுக்கல்லில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரது சகோதரர் தங்கராஜை தேடி வருகின்றனர்.

Advertisement