9 பேர் போராட்டத்துக்கு 70 போலீஸ் எப்படி எல்லாம் சோதிக்கிறாங்க!

கீழடி:மதுரை மாவட்டம், சிலைமான் ரயில்வே ஸ்டேஷனில் இஸ்லாமிய அமைப்புகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வந்த தகவலையடுத்து, 70க்கும் மேற்பட்ட மதுரை, சிவகங்கை மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், போராட்டத்திற்கு வெறும் ஒன்பது பேர் மட்டுமே வந்தனர்.
மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து, மனிதநேய ஜனநாயக கட்சி, பழங்குடி தமிழர் இயக்கம், நாம் தமிழர் கட்சி ஆகியோர் நேற்று காலை சிலைமானில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
சிலைமான், மதுரை மாவட்டத்திலும், ரயில்வே ஸ்டேஷன் சிவகங்கை மாவட்ட எல்லையிலும் அமைந்துள்ளது.
இதனால் மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட போலீசாரும், மதுரை ரயில்வே போலீசார், 20க்கும் மேற்பட்டோரும் சிலைமானில் குவிந்தனர்.
காலை, 9:00 மணி முதல் போலீசார் காத்திருந்தும் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்தவர்கள் யாரும் வரவில்லை. போலீசாரும், சிலைமான், கீழடி நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அலைந்து தேடியும் யாரும் சிக்கவில்லை.
மதியம், 12:00 மணியளவில் சமூக ஆர்வலர் ஹிதயத்துல்லாஹ் தலைமையில் நாம் தமிழர் கட்சி தினேஷ்பாபு, மனிதநேய ஜனநாயக கட்சி சசி, பாபு, பழங்குடி தமிழர் இயக்க தமிழ்ராஜா உள்ளிட்ட ஒன்பது பேர் மட்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.
சிலைமான் ரயில்வே கேட் அருகே போலீசார் அவர்களை தடுத்தனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட பின் கலைந்து சென்றனர். பெரும்படை திரளும் என தயாராக காத்திருந்த போலீசார் தலையில் அடித்துக் கொண்டு புறப்பட்டனர்.