சிட்டி கிரைம்
மது பாரில் அடிதடி
தென்காசி, மேலகடைய நல்லுாரை சேர்ந்தவர் மாடசாமி, 34; கட்டட தொழிலாளி. அவரது நண்பர் ரகுவரனுடன், 38 பீளமேடு பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில் மது அருந்த சென்றார். அப்போது அவர்களுக்கும், பார் சப்ளையர் பழனிவேல், 53 என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மூவரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். 3 பேரும் காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து அறிந்த பீளமேடு போலீசார், மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
சிகரெட் கேட்டு தகராறு
காந்திபுரம், 7வது வீதியை சேர்ந்தவர் சஜீஸ், 45; அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு, பேக்கரியை மூடிவிட்டு, கடையை ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், சிகரெட் கேட்டார். சிகரெட் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த வாலிபர் பேக்கரிக்குள் புகுந்து, பொருட்களை சேதப்படுத்தினார். சஜீசையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். சஜீஸ் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, டாடாபாத் பகுதியை சேர்ந்த சஜீர் என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மூதாட்டி தீயில் கருகி பலி
குறிச்சி, சிட்கோ பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி பார்வதி, 69. இவர், கடந்த 16ம் தேதி வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார். அப்போது அவரது ஆடையில் தீப்பிடித்தது. பார்வதி கவனிக்கும் முன் தீ உடல் முழுவதும் பரவியது. அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், அவரை மீட்டு அருகில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.