சென்னையில் குலுங்கிய கட்டடம்! நில அதிர்வு என தெறித்து ஓடிய மக்கள்

1

சென்னை; சென்னையில் 5 மாடி கட்டடம் குலுங்கியதால் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறி மக்கள் சாலைகளில் தெறித்து ஓடினர்.



சென்னை அண்ணாசாலையில் 5 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டடம் ஒன்று உள்ளது. இங்கு ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.


இந் நிலையில், அந்த கட்டடம் திடீரென குலுங்கியதாக தெரிகிறது. உள்ளே இருந்த பொருட்கள் ஆடியதால் அதிர்ச்சியான ஊழியர்கள், அங்குள்ள பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடங்களை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.


நில அதிர்வு காரணமாக தான் கட்டடம் குலுங்கியது என்று தகவல் பரவ, அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.


தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். நில அதிர்வு தான் ஏற்பட்டதா என்று அங்கு திரண்டிருந்த மக்களிடம் விசாரணை நடத்தினர். சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.


சென்னை அண்ணாசாலையில் பாலம் கட்டுமான பணிக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அப்போது ஏற்பட்ட அதிர்வுகள் நில அதிர்வாக மிகைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. நில அதிர்வு என்று பலர் கூறினாலும் ரிக்டர் அளவுகோலில் எந்த அதிர்வும் பதிவாகவில்லை என்று புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement