நலத்திட்டங்களுக்கு கோவில் நிதியை எதிர்பார்க்கும் ஹிமாச்சல் அரசு

9


ஷிம்லா: கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஹிமாச்சல பிரதேச அரசு, நிவாரண பணிகளுக்கும், அரசின் நலத்திட்டங்களுக்கும் நிதி அளிக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து உள்ளது. இதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கடந்த மாதம் 29ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஹிமாச்சல பிரதேச ஹிந்து மத அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் செயல்படும் சில அறக்கட்டளைகள், தொடர்ந்து அரசுக்கு பங்களிப்பை அளித்து வருகின்றன. மேலும் சில மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி கிடைக்கும் வகையில் பங்களிப்பை அளிக்கலாம் எனக்கூறப்பட்டு உள்ளது.

எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெய்ராம் தாக்கூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; அனைத்து நிதிகளையும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என அரசு தொடர்ந்து சுற்றறிக்கை அனுப்பி வருகிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமானது. கோவிட் அல்லது இயற்கை பேரிடர் காலங்களில் மனிதநேய பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் தேவைப்பட்டு இருந்தால், அது ஏற்றுக்கொள்ளக் கூடியது.

ஆனால், ஒருபுறம் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சனாதன தர்மத்தை அவமானப்படுத்துகின்றனர். மறுபுறம் கொள்கைகளை செயல்படுத்த கோவில் நிதியை எதிர்பார்க்கின்றனர். இந்த முடிவு விசித்திரமானது. கோவில் அறக்கட்டளை மற்றும் பொது மக்கள் உட்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பதிலடி
ஜெய்ராம் தாக்கூருக்கு பதிலடி கொடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நல்ல நோக்கங்களுக்காக மாநில அரசு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அனாதை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கவும், சிறந்த வாழ்க்கை கொடுக்கவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கோவில் மட்டும் நிதி கேட்கவில்லை. குழந்தைகள் நலனுக்காக அனைவரிடமும் நிதி எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


நிதிப் பற்றாக்குறை ஏன்
கடந்த 2023 ஆக., முதல் ஹிமாச்சல பிரதேச மாநிலம் தொடர்ச்சியாக காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 2023ல் ஏற்பட்ட இயற்கை பேரிடர் காரணமாக மாநில அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு, அசாம், பீஹார் மற்றும் டில்லி உள்ளிட்ட சில மாநில அரசுகள் நிதியுதவி அளித்தன.

அதேநேரத்தில் மத்திய அரசு அளிக்கும் நிதி தங்களுக்கு போதவில்லை என ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு கூறினார். இதனால் மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஆக., மாதம் , முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும் சம்பளம், போக்குவரத்து படிகளை பெற்றுக் கொள்ள மாட்டோம் என முதல்வர் கூறியிருந்தார்.

Advertisement