வன உரிமை சட்டத்தை குறைந்த அளவில் செயல்படுத்திய மாநிலம் தமிழகம் பட்டா கோரிய 45,000 மனுக்கள் தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், வன உரிமை சட்டத்தின் கீழ், 'நில உரிமை பட்டா' கோரி விண்ணப்பித்தவர்களில், 45,000 பேருக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வன உரிமை சட்டம், 2006ன் படி, மலைப் பகுதிகளில் வசித்து வரும், பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற சமூக மலைவாழ் மக்களுக்கு, வனப்பகுதியில் அதிகாரம் அளிக்கும் வகையில், தனிநபர் நில உரிமை பட்டா மற்றும் சமுதாய பட்டா வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் வன உரிமை சட்டத்தின் கீழ், கடந்த, 13 ஆண்டுகளில், நில உரிமை பட்டா கோரி விண்ணப்பித்த, 60,000க்கும் மேற்பட்ட நபர்களில், 15,442 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுஉள்ளது.

தமிழகம் முழுதும் மலைப்பகுதியில் வசிக்கும், 45,000 பேரின் மனுக்கள், விசாரணை இன்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நிலம் சர்வே செய்யப்படாமல், பல்வேறு காரணங்களை கூறி, பல்லாயிரம் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அச்சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் வன உரிமை சட்டப்படி, 2011ல் இருந்து, 'நில உரிமை பட்டா' வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 13 ஆண்டுகளில், 15,442 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும், வன உரிமை சட்டம் செயல்படுத்தப்பட்டு, 18 லட்சத்திற்கும் அதிகமான மலைவாழ் மக்களுக்கு, பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இச்சட்டத்தை நாட்டிலேயே குறைந்த அளவில் செயல்படுத்திய மாநிலமாக தமிழகம் உள்ளது.

தற்போது, தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அனைவரது அடிப்படை தேவைகளில் முதன்மையானதாக வீடு உள்ளது.

எனவே, வீடு கட்ட, நிலத்திற்கு பட்டா கேட்டு போராடி வருகிறோம். பட்டா இல்லாத இடத்தில், வீடு கட்டினால் அதை அகற்றும்படி வனத்துறையினர் நெருக்கடி கொடுக்கின்றனர். எனவே, வீடு கட்டாமல், குடிசையில் வசிக்க வேண்டிய நிலை உள்ளது.

இச்சட்டத்தை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு, இதுவரை கூட்டப்படாமல் உள்ளது.

இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரிகளிடம், தொடர் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, கூட்டத்தை உடனடியாக கூட்டி, நிராகரிக்கப்பட்ட மற்றும் கிடப்பில் உள்ள மனுக்கள் மீது, உரிய முறையில் விசாரணை நடத்தி, அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement