இந்திய ஜோடி ஏமாற்றம்: ஜெர்மன் ஓபன் பாட்மின்டனில்

முல்ஹெய்ம்: ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் தனிஷா, துருவ் கபிலா ஜோடி தோல்வியடைந்தது.

ஜெர்மனியில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ, துருவ் கபிலா ஜோடி, இந்தோனேஷியாவின் ரேஹன் குஷார்ஜன்டோ, குளோரியா விட்ஜஜா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 23-25 என போராடி இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21-10 எனக் கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய இந்திய ஜோடி 15-21 எனக் கோட்டைவிட்டது.

முடிவில் தனிஷா, துருவ் கபிலா ஜோடி 23-25, 21-10, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் தருண் 21-16, 17-21, 8-21 என பிரான்சின் டோமா ஜூனியர் போபோவிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-15, 23-25, 22-24 என ஜப்பானின் ரிகோ குன்ஜியிடம் போராடி வீழ்ந்தார். மற்ற காலிறுதியில் இந்தியாவின் தஸ்னிம் மிர், ரக் ஷிதா ஸ்ரீ தோல்வியடைந்து வெளியேறினர். இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.

Advertisement