மனைவி மிரட்டலால் கணவர் மீது 'போக்சோ'; போலீசுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

சென்னை : குடிக்கு அடிமையான கணவர் மீது வழக்குப் பதிவு செய்ய, அவரது மனைவி விடுத்த மிரட்டலுக்கு பயந்து, கணவர் மீது, 'போக்சோ' வழக்குப் பதிவு செய்த கடலுார் காவல் துறையை, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லிங்கம். இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளனர். குடிப்பழக்கம் உடைய லிங்கம், தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கடலுார் மகளிர் காவல் நிலையத்தில், கணவர் லிங்கத்துக்கு எதிராக கடந்தாண்டு மனைவி புகார் செய்தார்.
அதில், குடிபோதையில் இருந்த கணவர், தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்து இருந்தார். அதனால், லிங்கம் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, கடலுார் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் லிங்கம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:
பொய் புகார் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு இது. மனுதாரரும், அவரது மனைவியும், மகளும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். தினமும் குடித்து விட்டு வரும் மனுதாரர், மனைவியுடன் சண்டை போடுவது உண்மை தான்.
எதையும் சரியாக விசாரிக்காமல், போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். வழக்கில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். புகாரில் கூறியது போல சம்பவம் நடக்கவில்லை. மகள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார் லிங்கம்.
இவ்வாறு வழக் கறிஞர் கூறினார்.
அதை ஏற்ற நீதிபதி, மனுதாரரின் மனைவி, மகளை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். கடந்த மாதம் 20ம் தேதி, லிங்கத்தின் மனைவி, மகள் ஆகியோர், நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது அந்தச் சிறுமி, 'அப்படி சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அப்பாவும், நாங்களும் சந்தோஷமாக இருக்கிறோம்' என்றார். மனுதாரரின் மனைவியும், தாங்கள் சந்தோஷமாக வாழ்வதாக தெரிவித்தார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரரின் மனைவி, தன் கணவர் தினமும் குடித்து வந்து தகராறு செய்வதாகவும், அவர் மீது நடவடிக்கை கோரியும் புகார் அளித்து உள்ளார்.
'புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்யவில்லை எனில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அதனால் தான், வழக்குப்பதிவு செய்யப்பட்டது' எனக்கூறி, அறிக்கையும் தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு எதிராக, காவல் துறையால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இதுபோல சட்ட விரோதமாக வழக்குப்பதிவு செய்யக்கூடாது என, காவல் துறையை இந்த நீதிமன்றம் எச்சரிக்கிறது.
வழக்குப் பதிவு செய்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாதபட்சத்தில், எப்படி இது போன்ற வழக்கை பதிவு செய்ய முடியும்? எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


