டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதலால் உக்ரைன் எதிர்காலம்... கேள்விக்குறி! ஐரோப்பா ஆதரவு போதுமா?

19


நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் வெடித்த பகிரங்க மோதலின் விளைவாக, உக்ரைன் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. டிரம்பால் அவமதிக்கப்பட்டதாக கருதப்படும் ஜெலன்ஸ்கிக்கு ஆறுதலாக ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன. ஆனால், அமெரிக்காவின் துணை இல்லாமல் ரஷ்யாவுடன் நடக்கும் போரில் இந்த நாடுகள் எதுவும் செய்துவிட முடியாது என்ற எதார்த்தம் பலருக்கும் புரிகிறது.



கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. ஐரோப்பிய நாடுகளும், அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், உக்ரைனுக்கு துணை நின்றன.


அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் நிலைமை மாறியது. உக்ரைனுக்கு உதவிகளை நிறுத்தினார். போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்தார். அவரை அழைக்காமலே அமெரிக்க- ரஷ்ய பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் பேச்சு நடத்த ஏற்பாடு செய்தார்.


இதுவரை செய்த உதவிக்கு விலையாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு தரும்படி நிர்ப்பந்தம் செய்தார். ஜெலன்ஸ்கிக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், டிரம்பின் நெருக்கடியை அவரால் தாங்க முடியவில்லை. எனவே, ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா சென்றார். நேற்று முன்தினம் இரவு வெள்ளை மாளிகையில் இரு அதிபர்களும் சந்தித்தனர். நிகழ்ச்சி உலகம் முழுதும் நேரடியாக 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பானது.


பேச்சு முடிந்து ஒப்பந்தம் சீக்கிரமே கையெழுத்தாகும் என டிரம்ப் காத்திருந்தபோது, ஜெலன்ஸ்கி சில கருத்துக்களை அழுத்தமாக வெளிப்படுத்தினார். ரஷ்ய அதிபர் புடின் பேச்சை தன்னால் நம்பவே முடியாது; புடின் ஒரு கொலைகாரன் என்றார். அதோடு, இப்போது போர் முடிவுக்கு வந்தாலும், பிற்காலத்தில் ரஷ்யா மீண்டும் தாக்கினால், உக்ரைனை பாதுகாக்க அமெரிக்கா உத்தரவாதம் தர வேண்டும் என்றார்.


இதனால் டிரமப் எரிச்சல் அடைந்தார். உக்ரைனில் உள்ள கனிமங்களை வெட்டி எடுப்பதற்காக பல ஆயிரம் அமெரிக்கர்கள், பல ஆண்டுகளுக்கு உக்ரைனில் தங்கி வேலை செய்ய போகின்றனர்; அதை விட தனியாக என்ன உத்தரவாதம் வேண்டியிருக்கிறது என்று கேட்டார்.


சந்திப்பில் உடன் இருந்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் குறுக்கிட்டார். இத்தனை நாள் துணை நின்ற அமெரிக்கா மீது நன்றி உணர்வு இல்லாமல், வெள்ளை மாளிகைக்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்னிலையில் அதிபர் டிரம்பை அவமதிக்கிறீர்கள் என்று ஜெலன்ஸ்கி மீது பாய்ந்தார்.


அவரை ஒரு பொருட்டாகவே எடுக்காத ஜெலன்ஸ்கி, நாங்கள் பெரிய மனிதர்கள் பேசும் இடத்தில் உனக்கென்ன வேலை என்பதுபோல பதிலடி கொடுத்தார்.


அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த டிரம்ப், “போரை நிறுத்த உங்களுக்கு இஷ்டம் இல்லை என்று தெரிந்து விட்டது. ஆனால், இதில் உங்களால் எதுவும் செய்ய முடியாது. நான் விரும்புவது தான் நடக்கும். அதற்கு சம்மதம் என்றால் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள்; இல்லை என்றால் பிறகு பார்க்கலாம். இதற்கு மேல் நேரத்தை வீணடிக்க வேண்டாம்,” என்று முடிவுரை போல் சொன்னார். ஜெலன்ஸ்கியை எழுந்து போக சொல்வதற்கு சமமாக டிரம்ப் இவ்வாறு கூறியதுடன், சந்திப்பு சட்டென முடிந்தது.


ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இரு அதிபர்களும் பங்கேற்கும் விருந்தும் நடக்கவில்லை. இந்த நிகழ்வு சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஜெலன்ஸ்கி கன்னத்தில் பளார் என்று அறையாமல் விட்டது டிரம்பின் பெருந்தன்மையை காட்டுகிறது என ரஷ்யா கூறியது.


ஜெலன்ஸ்கியின் வீரத்தை பாராட்டுவதாக சில ஐரோப்பிய நாடுகள் கூறின. ஆனால், ஜெலன்ஸ்கியின் கதை இதோடு முடிந்தது என ரஷ்ய ஆதரவு நிலை கொண்ட ஐரோப்பிய நாடுகள் கூறின.



அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி நன்றி

ஜெலன்ஸ்கி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:அமெரிக்காவுக்கு நன்றி. உங்களுடைய ஆதரவுக்கும், இந்த சந்திப்புக்கும் நன்றி. அமெரிக்க அதிபர், பார்லிமென்ட் மற்றும் அமெரிக்க மக்களுக்கும் நன்றி. உக்ரைனுக்கு உடனடியாகவும், நிரந்தரமாகவும் அமைதி தேவை; அதற்காகவே நாங்கள் முயற்சி செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.டிரம்ப் அறிக்கையில் கூறியதாவது: நேரடியாக பேசும்போதுதான், பலவற்றை தெரிந்து கொண்டோம். ஜெலன்ஸ்கிக்கு போரை நிறுத்த விருப்பம் இல்லை. எங்களுக்கு தேவை அமைதி. அவர் அமெரிக்காவை அவமதித்துவிட்டார். அமைதி தேவை என்று நினைத்தால், அவர் திரும்ப வரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement