'கொரோனா' கால கட்டில், மெத்தைகள் அரசு கல்லுாரியில் வீணாகும் அவலம்

பல்லடம் : 'கொரோனா' காலத்தில் தருவிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள், பல்லடம் அரசு கல்லுாரியில் உள்ள பழைய வகுப்பறை கட்டடங்களில் குவித்து வைக்கப்பட்டு வீணாகிறது.
கடந்த, 2021ல், 'கொரோனா' நோய்பரவல் உலகையேஆட்டிப்படைத்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிய, வேறு வழி இன்றி, அரசு பள்ளி, கல்லுாரி, மண்டபங்கள் உள்ளிட்டவற்றிலும், சிறப்பு மருத்துவ வார்டுகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பல்லடம் அரசு கல்லுாரி பழைய வகுப்பறை கட்டடங்களில், பொதுமக்களுக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வந்தன. வகுப்பறைகளில், மெத்தைகளுடன் கூடிய கட்டில்கள் அமைக்கப்பட்டன.
நோய் தொற்று பரிசோதனைக்கு தேவையான கையுறை, முகக்கவசம், ரத்த மாதிரி சேக ரிப்பதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவையும் தருவிக்கப்பட்டன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், சிறப்பு வார்டுகளும் மூடப்பட்டன.பல்லடம் அரசு கல்லுாரி வகுப்பறைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த நோய் தொற்று சிகிச்சை, பரிசோதனை ஆகியவையும் நிறுத்தப்பட்டன.
மூன்று ஆண்டு ஆன நிலையில் அரசு கல்லுாரியின் பழைய வகுப்பறை கட்டடங்களில், கொரோனா காலகட்டத்தில் தருவிக்கப்பட்ட கட்டில்கள், மெத்தைகள், கையுறைகள், பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், படுக்கை வசதி இன்றி, நோயாளிகள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் வரிப்பணத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட கட்டில்கள், மெத்தைகள் உள்ளிட்டவை, பயன்பாடற்று கிடப்பதால், துருப்பிடித்தும், கரையான்கள் பிடித்தும் நாசமாகி வருகின்றன.
கொரோனா பாதிப்பு முடிந்து மூன்று ஆண்டு களாகியும், கேட்பாராற்று கிடக்கின்றன. பொருட்களை அரசு மருத்துவமனைக்கு கொடுத்து, வகுப்பறைகளை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.