இஸ்ரேல் எல்லையில் கேரளாவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை

ஜோர்டான்: இஸ்ரேல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற கேரளாவைச் சேர்ந்த நபரை ஜோர்டான் எல்லை பாதுகாப்பு போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவ தாமஸ் கேப்ரியல் பெரைரா. இவரையும், இவருடைய உறவினர் எடிசனையும் அவர்களின் நண்பர் பிஜூ என்பவர் ஜோர்டான் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இஸ்ரேலுக்கு செல்ல சுற்றுலா விஷா பெற முயன்றுள்ளனர். ஆனால், சுற்றுலா விசா பெறுவதற்கு குறைந்தது 10 பேராவது இருக்க வேண்டும் என்பது விதியாகும்.
இந்த சூழலில் இஸ்ரேலுக்குள் செல்வதற்காக ஜோர்டானின் எல்லையை கடக்க முயன்றனர். அப்போது, ஜோர்டானின் எல்லை பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், கேரளாவைச் சேர்ந்த பெரைரா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து எடிசன் கூறுகையில், "எல்லையை கடக்கும் போது ஜோர்டான் எல்லை பாதுகாப்பு படையினர் எங்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, எங்களுக்கு அவர்களின் மொழி பேச தெரியவில்லை. அவர்களுக்கும் நாங்கள் பேசிய மொழி புரியவில்லை. எங்களை அழைத்துச் சென்று சுற்றுலா வழிகாட்டி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு அந்த நாட்டின் மொழி பேச தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு நடக்கும் போது பெரைரா நிலைகுலைந்து இருந்தார். நான் கண் விழித்து பார்க்கும் போது, சிறையில் இருந்தேன். அதன்பிறகு, தூதரக அதிகாரிகள் சொல்லியே பெரைரா உயிரிழந்தது எனக்கு தெரிய வந்தது," இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து ஜோர்டானுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், "இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் எதிர்பாராத ஒன்று. ஜோர்டான் நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். விரைவில், அவரது உடல் இந்தியா கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்," எனக் கூறினர்.




