வானேறும் விழுதுகள்

வாட்ஸ் அப்,பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் என்று மொபைல் போன் மூலமாக ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான படங்கள் பார்வைக்கு வந்து விழுகிறது,ஒரு படத்தை பார்த்து நினைவில் வைத்துக் கொள்வதற்குள் அடுத்தடுத்து நுாற்றுக்கணக்கான படங்கள் வந்து முந்தைய படங்களின் தடங்களையும், நினைவுகளையும் அந்த சுவடே இல்லாமல் மனதிலும் நினைவிலும் இருந்து அழித்து விடுகிறது.
இந்த ராட்சத அலையில் சில நல்ல படங்களும் கூட சிதைந்துவிடுகிறது.அதற்கு காரணம் பார்வையில் படுவது எல்லாம் படங்கள் என்றாகிவிட்டதுதான் அதற்கு காரணம்.
பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆண்டாண்டு காலமாக தங்களது ரசனையை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்.
இதில் மாற்றம் காணவிரும்பும் இந்த தலைமுறையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, ஏலினா திபேன்,அருண் கார்த்திக்,பிருந்தா அனந்தராமன்,கிருத்திகாஸ்ரீராம், ஓஷின் சிவசண்முகம்,பிரியதர்சனி ரவிச்சந்திரன்,சதிஷ்குமார்,சங்கர் நாராயணன், ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்,ஸ்டீவ்ஸ் ரோட்ரிகோஸ்,விவேக் மாரியப்பன் ஆகிய 12 புகைப்படக்கலைஞர்களின் புகைப்படங்களைக் கொண்டு 'வானேறும் விழுதுகள்' என்ற தலைப்பில் போட்டோ பினாலே ஆதரவுடன் சென்னை விஆர் மாலில் புகைப்படக் கண்காட்சி நடத்திவருகின்றனர், இதன் கியூரேட்டராக ஜெய்சிங் நாகேஸ்வரன் உள்ளார்.
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலைப் படித்துவிட்டு அதை புகைப்படக் கதையாக சொல்லியுள்ள விதமும்,இன்றைய சமூகத்தில் பெண்கள் எப்படி எல்லாம் துயரங்களை சுமக்கிறார்கள் என்ற காட்சிப்படுத்தியுள்ள விதமும் சிறப்பாக இருக்கிறது, கண்காட்சி கூடத்தின் ஒரு மூலையில் புகைப்படங்களை மூட்டைகட்டி குவியலாக வைத்துள்ளனர் அதுதான் இன்றைய சோஷியல் மீடியா படங்கள் என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர்.
இந்த கண்காட்சியைப் போகிற போக்கில் பார்த்துவிட்டுப் போனால் புரிவது சற்று சிரமமே நின்று நிதானித்து பார்த்து உள்வாங்கினால் மட்டுமே கருத்து புரியும்,அதை புரிந்து கொண்டு பார்ப்பதற்கு அருகிலேயே இருந்து உதவுகிறார் ஜெய்சிங்.இந்த வானேறும் விழுதுகள் என்ற புதிய முயற்சிக்கு வாழ்த்து கூறி வரவேற்போம்.
-எல்.முருகராஜ்