விமானத்தில் புகைபிடித்த ஆலப்புழா நபர் கைது

திருவனந்தபுரம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புகைபிடித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மன்னாரைச் சேர்ந்த 54 வயதுடைய நபர், சவுதி அரேபியா நாட்டின் தம்மாமில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வந்தார்.
அப்போது அவர் கழிப்பறையில் லைட்டரைப் பயன்படுத்தி, சிகரெட்டைப் பற்ற வைத்தார்.
இதனால் விமானத்தில் தீ அபாய எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் தொடங்கியது. விமான ஊழியர்கள் எங்கு தீப்பற்றியது என அங்கும் இங்கும் தேடினர்.
இருக்கையில் இருக்கும் பயணிகள் யாரும் இந்த வேலையை செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. கடைசியில், கழிப்பறையில் இருந்த பயணி லைட்டர் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து விமானம் கேரளாவில் தரை இறங்கியவுடன் அந்த பயணி போலீசிடம் ஓப்படைக்கப்பட்டார்.
லைட்டர்கள் உட்பட எந்த ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் எதுவும் விமானத்தில் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது. குறிப்பிட்ட அந்த பயணி, விமானத்தில் ஏறும்போது லைட்டரை பதுக்கி வைத்து கொண்டு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏர் இந்தியா அதிகாரியின் புகாரின் அடிப்படையில் வலியதுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து, கவனக்குறைவாக நடந்து கொண்டதற்காக அவரை எச்சரித்தனர்.





