பாரதப் பண்பாட்டு பயிற்சி இலவச வகுப்பு ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் நடத்துகிறது
திருப்பூர் : திருமுருகன் பூண்டி, ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில், பாரதப் பண்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. ஞாயிறு தோறும் காலை 10:00 முதல் 12:30 மணி வரை பாரதப் பண்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இதில், 10 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இதில் ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு, நீதி போதனை, ஸ்லோகங்கள், சிலம்பு, இதிகாசம், புராணம், தியானம், யோகாசனம், இசை, பாட்டு, ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். முற்றிலும் இலவசமாக இப்பயிற்சிகள் வழங்கப்படும்.
துவக்க விழாவில் சேவா லய நிறுவனர் செந்தில்நாதன் பேசியதாவது:
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் முன்னிட்டு அவர் பின்பற்றிய பாரத நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை இன்றைய இளைய தலைமுறை அறிந்து பின்பற்றும் வகையில் இப்பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன.
அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. நம் பண்பாட்டை நாம் ஏதோ ஒரு வகையில் இழந்து வருகிறோம். இது சில சக்திகளால் மறைக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு வருகிறது.
இவை குறித்து முறையாக, முழுமையாக அறிந்து அதைப் பின்பற்றும் வகையில் இப்பயிற்சி அமையும்.நம் தேசம் குறித்து பலரும், பல கருத்தையும் தெரிவித்துள்ளனர்.
சுவாமி விவேகானந்தர் தான் தேசத்தின் லட்சியம் குறித்து பேசியுள்ளார். தியாகமும், சேவையும் நம் தேசத்தின் லட்சியம் என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆன்மிகப் பேச்சாளர் முரளி பேசினார்.