நெல் விற்று 20 நாளாச்சு பணம் என்ன ஆச்சு விவசாயிகள் குமுறல்

மேலுார் : 'மேலுார் பகுதியில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து 20 நாட்களுக்கு மேலாகியும் பணம் வரவு வைக்காமல் காலம் தாழ்த்துவதாக' தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மீது புகார் எழுந்துள்ளது.
மேலுார் ஒருபோக பாசன பகுதி விவசாயிகள் விளைவித்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 30 இடங்களில் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. அறுவடை செய்யும் நெல்லை, விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் உள்ள பட்டியல் எழுத்தரிடம் வி.ஏ.ஓ., ஒப்புதல் சான்றுடன் விற்பனை செய்வார்.
வழக்கமாக நெல்லை பெற்றதும் விவசாயியின் அலைபேசிக்கு அதிகாரிகள் குறுஞ்செய்தி அனுப்பி ஓரிரு நாளில் பணம் வரவு வைக்கப்படும். ஆனால் மேலுார் பகுதியில் கீழவளவு உள்ளிட்ட பல கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்து 20 நாட்களுக்கு மேலாகியும் பணம் வரவு வைக்கவில்லை.
விவசாயி தர்மலிங்கம் கூறியதாவது: கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்தோம்.
அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 3 ஆயிரம், மேலும் கொள்முதல் நிலையத்திற்கும் செலவு செய்து கொண்டு செல்கிறோம். ஆனால் கொள்முதல் மையத்தில் நெல் விற்பனை செய்து 20 நாட்களுக்கு மேலாகியும் பணம் வரவு வைக்கவில்லை. நாட்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறோம். விவசாயிகளின் நலன் கருதி பணத்தை வரவு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத் கூறுகையில், ''விரைவில் விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.